Saturday, 16 June 2012

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
   அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம்!
மன்னவ ராயினும் மறத்தல் இயலாம்
   மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்!
பின்னை அவர்தமை பேணி மேலும்
   பிள்ளைகள் என்போர் பணிசெய நாளும்
தென்னை மரமாய்ப் பெற்றவர் தாமே
    தினமும் காத்து வளர்தவர் ஆமே! 
                                            - புலவர் சா இராமாநுசம் 

நம் தாயும் தந்தையும் நாம் காண்கின்ற முதல்வர்கள். நாம் குடியிருந்த கோயில்  நம் தாய் தந்தையர். அவர்களையே பிறந்தவுடன் காண்கிறோம். மற்றவர்கள் எல்லாம் பிறகு வந்தவர்கள். அப்படி முதன் முதலில் காண்கின்ற நம் மாதா பிதாக்களை தெய்வமாக மதித்து வணங்குதல் பல்லாண்டு காலம் இம்மண்ணில் நிலவி வரும் பண்பாடாகும்.

"தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை." இதுவும் முதுமொழி. தாயும் தந்தையும் நம் இரு கண்கள் போன்றவர்கள். கண்கள் இல்லாவிட்டால் ஒருவனது வாழ்வில் எத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் தாய் இல்லாமல் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. தாயே எமக்கு மூலாதாரம். தந்தையே ஜீவாதாரம். அப்படிப்பட்ட இந்தத் தாயின் அன்பு, உலகின் எந்த அன்புக்கும் ஈடாகாது. அதனால் தான் தாயை முன்னுக்கு வைத்து மாதா,பிதா, குரு,தெய்வம் என்று போற்றுகின்றார்கள்.
பிள்ளைகளுக்கு பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். உண்ணும் முறை, உடுத்தும் முறை, பேசும் முறை, பழகும் முறை, நடந்து கொள்ளும் முறைபோன்றஅடிப்படையான செயல்களுக்கு பெற்றோர்களே ஆசிரியர்கள். மேலும் பண்புகள், பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள், நல்லொழுக்கம், அறநெறி, இறைஉணர்வு போன்றவற்றையும் முதன் முதலாக பிள்ளைகளுக்கு ஊட்டுவதும் பெற்றோர்களே.
குழந்தைகள் நன்கு படிப்பதற்கும், நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கும் தாயே முக்கிய காரணம். அவளின் அதி கவனமும், கவனிப்பும் இல்லையேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’.